யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை – 29.03.2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற ஆலோசனை குழுவின் கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாதியர் பற்றாக்குறை காரணமாக முழுமைான சேவையினை மக்களுக்கு வழங்கமுடியாது இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அண்ணளவாக 1800 தாதியர்களுக்கான தேவை இருக்கின்ற நிலையில் தற்போது சுமார் 650 தாதியர்கள் மாத்திரமே சேவையாற்றி வருகின்றனர்.
எனவே முடிந்தளவு தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதிகளை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.