;
Athirady Tamil News

நிறுத்திவைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் படகுகளை கரை சேர்ப்பதில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ்

0

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த துறைமுகத்தில் தொடர்ந்துவரும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (30.03) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா நிலைமைகளை ஆராய்ந்துகொண்டார்.

மேலும் மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் ரொலர் படகுகளும் மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை உண்டுபண்ணி வருகின்றன.
இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால் அவற்றை ஒழுங்குபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைகள் நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நிலைமைகளை அவதானித்த அமைச்சர் அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆளமான பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக தொழில் மற்றும் எரிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும் படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்குவலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் அவ்வாறான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும் தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.