இலங்கை இந்திய உறவில் விரிசல்! கடற்றொழிலாளர் பிரச்சினையால் வலுக்கும் சிக்கல்
இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக அரபிக்கடலுக்குள் சிறிலங்கா கடற்றொழிலாளர்கள் செல்வதற்கு இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு இந்தியா எந்த வித பதிலினையும் அளிக்காமால் புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு (2023) சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இந்த கோரிக்கையை விடுத்திருந்தார், தவிரவும் இந்தியாவூடான பாதையானது சிறிலங்கா கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தை குறைக்க உதவும் எனவும் அவர் விளக்கியிருந்தார்.
தற்போது பயன்படுத்தப்படும் நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி செல்லும் பாதை மிகவும் நீண்ட பாதையாக அமைவதால் இந்தியா இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டிருந்தது.
நில இணைப்பு
ஆனால் அதற்கு பதிலளிக்காத இந்தியா, அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் சிறிலங்கா கடற்றொழிலாளர்களை சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதாக கூறி இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இரு நாடுகளும் தற்போது நில இணைப்பு மற்றும் பவர் கிரிட் இணைப்பு உள்ளிட்ட பல இணைப்பு திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர், பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாகவும் வழங்கியுள்ளது.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
ஆனால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை இருதரப்பு உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் இரு நாட்டுக்குமிடையே பிணக்குகள் வலுத்து வருகிறது.
தவிரவும் இது சிறிலங்கா கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது, ஆனால் சிறிலங்கா கடற்றொழிலாளர்களை சர்வதேச கடற்பகுதிக்கு செல்ல அனுமதிக்குமாறு மாத்திரம் சிறிலங்காவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு இந்தியா பாராமுகமாக இருப்பது இரு நாட்டுக்குமான உறவில் சிக்கலை உண்டாக்கும் என கூறப்படுகின்றது.