அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முடக்கப்பட்டுள்ள சமுர்த்தி திட்டம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முழு சமுர்த்தி திட்டமும் முடக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இதன்படி, சமுர்த்தி திட்டத்தின் கீழ் இயங்கி வந்த சமூக பாதுகாப்பு நிதி, வீடமைப்பு கடன், கட்டாய சேமிப்பு நிதி என்பன தற்போது முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும், சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 இலட்சம் சமுர்த்தி பயனாளிகளில் 08 இலட்சம் பேரே அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு திட்டத்துடன் இணைக்கப்படாததால் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பணம் வரவு வைக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரல்
வீடமைப்பு கடன் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் நாற்பத்து மூவாயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் நிதியும் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஏறக்குறைய இருபது வருடங்களாக சமுர்த்தி திட்டத்தில் அங்கம் வகிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் நிவாரணத் திட்டத்தினால் இந்த நன்மைகள் அனைத்தையும் இழந்துள்ளமை பாரதூரமானது எனவும், ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரியுள்ளதாகவும் ஜகத் குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.