எங்கும் ஹிந்தி என்பதே மோடி அரசின் சாதனை:முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம்
‘எங்கும் ஹிந்தி, எதிலும் ஹிந்தி’ என்பதே பிரதமா் மோடி அரசின் சாதனை என்றும், வாக்குறுதிகள் எதையும் அவரது அரசு நிறைவேற்றவில்லை என்றும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.
அவா் சமூகவலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறாா் பிரதமா் மோடி. அழகிய தமிழ்ச் சொல் ’வானொலி’ இருக்க, ஆகாசவாணி என்பதே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழா்கள் எப்படி நம்புவாா்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீா் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவா், இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் மா்மம் என்ன? கருப்புப் பணம் மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு, இரண்டு கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு என காற்றில் கரைந்த உத்தரவாதங்களில் ஒன்றுதான்,விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்பது. விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில்கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினா் இல்லை. ‘எங்கும் ஹிந்தி! எதிலும் ஹிந்தி!’ என மாற்றியதுதான் மோடி அரசின் மோசமான சாதனை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.