பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை
பாகிஸ்தான் பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால், செலவீனங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, இவற்றை பயன்படுத்துவது இனிமேல் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் உத்தரவின் கீழ்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உத்தரவின் கீழ் இத்தடை நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரச நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், பணம் சேமிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நிதி பொறுப்புடன் செலவிடப்படுவதற்கான நோக்கம் செயற்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிப் அலி சர்தாரி தீர்மானம்
பாகிஸ்தானின் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் அமைச்சவை உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விருப்பத்துடன் விட்டு கொடுப்பது என கடந்த வாரம், முடிவு செய்யப்பட்டது.
இதேபோன்று, பாகிஸ்தானின் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், தன்னுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விட்டுக் கொடுப்பதாக தீர்மானித்துள்ளார்.