நெதன்யாகு உடனே பதவி விலக வேண்டும் : இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரும்பிய பொதுமக்கள்
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றுள்ளனர் அந்நாட்டு மக்கள்.
நேற்று (30) இடம்பெற்ற இந்த போராட்டமானது டெல்அவிவ், ஜெருசலேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள், தவிரவும் பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டம் நடத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்று, அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றநிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
16 பேர் கைது
சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.
டெல்அவிவில் இன்று (31) அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.