சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார வாகனம்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது முதல் SU7 மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மின்சார வாகன அறிமுக நிகழ்வில் ஷாவ்மியின் தலைமை நிர்வாகி லய் ஜுன் SU7 மின்சார வாகனத்தின் விலை 215,900 யுவான்(ரூ.24.89 லட்சம்) மற்றும் மேக்ஸ் பதிப்பின் விலை 299,900 யுவான்(34.58 லட்சம்) என தெரிவித்துள்ளார்.
விற்பனையின் முதல் 27 நிமிடங்களுக்குள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஓடர்களை பெற்றதாக ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார கார் உற்பத்தி
மின்சார கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான டெஸ்லா மற்றும் பி.ஒய்.டி நிறுவனங்களை ஷாவ்மி எதிர்கொள்கின்ற நிலையில் போர்ஷேவின் டெய்கான் மற்றும் பனமேரா மொடல்களுடன் ஒப்பிடுகையில் SU7 மின்சார வாகனம் குறைந்தபட்சம் 700 கிலோ மீற்றர்(435 மைல்கள்) செல்லக் கூடியதெனவும் மற்றும் இது டெஸ்லா மொடல் மூன்றின் 567 கிலோமீற்றர் தூரத்தை முறியடிக்குமெனவும் லய் ஜுன் குறிப்பிட்டுள்ளார்.
SU7 மின்சார வாகனத்தில் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களுடன் இணைப்பதற்கான வசதி இருப்பதால் தற்போதுள்ள வாடிக்கையாளர்களை அது ஈர்க்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தரும் தரவுகளின்படி ஷாவ்மி உலகளவில் ஸ்மார்ட்போன்களின் மூன்றாவது பெரிய விற்பனையாளராக உள்ளதுடன் செல்போன் சந்தையில் சுமார் 12% பங்கை ஷாவ்மி கொண்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனம்
மின்சார கார்களை தயாரிக்க விரும்பும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல சவால்கள் இருக்கின்றமையால்தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் மின்சார வாகனங்களை உருவாக்கும் திட்டத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் தனது வாகன வணிகத்தில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளதாக ஷாவ்மி தெரிவித்துள்ளதுடன் சீன மின்சார வாகனச் சந்தை மிகவும் முதிர்ச்சியடைந்ததுள்ளதாகவும் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் நிலையான சூழலை உருவாக்குவதாகவும் ஆராய்ச்சி நிறுவனமான ரைஸ்டாட் எனர்ஜியை சேர்ந்த அபிஷேக் முரளி தெரிவித்துள்ளார்.
மேலும் பேட்டரி விநியோகச் சங்கிலி மிகவும் வலுவாக உள்ளதுடன் வளர்ந்து வரும் மின்சார வாகன ஊட்டத்தைப் பூர்த்தி செய்ய நாட்டில் சார்ஜிங் நெட்வொர்க்கும் வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை நிர்ணயம்
சீனாவின் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான விலை நிர்ணயிக்கும் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில் ஷாவ்மியின் இந்த முதல் கார் அறிமுகமாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கார் சந்தை ஏற்கெனவே பல உற்பத்தியாளர்களைக் கொண்டு நெரிசலாக உள்ள நிலையில் புதிதாக நுழைபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் அதிகாரிகளிடம் இருந்து ஷாவ்மி ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
மேலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் சீன அரசு வழங்கும் மானியங்கள் அவர்கள் நாட்டின் மின்சார கார் உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாடல்களை விட குறைவான விலையில் விற்க உதவியதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.