கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்னை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.
1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது எனறு இந்தியா – இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.