பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புமாறு தனது நட்பு நாடுகளிடம் பிரான்ஸ் கோரியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளிடமிருந்து 2185 காவல்துறையினரை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மற்றும் 35 நாடுகள் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் பிரெஞ்சு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள்
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் எட்டு வரை நடைபெறும் பராலிம்பிக் போட்டிகளின்போது தினந்தோறும் 45,000 பிரெஞ்சு காவல்துறையினரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதுடன் 20,000 தனியார் பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்கள் மற்றும்15,000 படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் முக்கிய சர்வதேச விளையாட்டு விழாக்களில் வெளிநாட்டுப் படையினரை ஈடுபடுத்துவது வழக்கமாகவுள்ளது.
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக கட்டாருக்கு 200 காவல்துறையினரை பிரான்ஸ் அனுப்பியிருந்த நிலையில் கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.