பாடசாலை மட்ட நிகழ்வுகளில் அரச புலனாய்வாளர்களின் தலையீடுகள்; கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை , பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜிடம் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக, தெல்லிப்பழைப் பிரிவு பொலிஸார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும், விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும்.
இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாடசாலை மட்ட வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.
இத்தகைய சுதந்திரங்களை மதிக்காத, தெல்லிப்பழை பொலிசாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அடக்குமுறைகளை பிரயோகின்ற செயற்பாடுகளாகும்.
கல்விச் செயற்பாடுகளில் தெல்லிப்பழை பொலிசாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினைக் கோரிநிற்கின்றோம். என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.