கச்சத்தீவை கேட்டு இந்தியா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை : ஜீவன் தொண்டமான் விளக்கம்
கச்சதீவை (Kachchatheevu) திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்று இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள கச்சதீவு விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை – இந்திய ஒப்பந்தம்
“காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி (Narendra Modi) தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சதீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.
1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கட்டுப்பாட்டில்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை தவிரவும், கச்சதீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை.
ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும், இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது” என்றார்.