நீர் பற்றாக்குறையில் பெங்களூரு! 10% விநியோகம் நிறுத்தம்!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 10 சதவிகித விநியோகத்தை குறைக்க பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதிக அளவு தண்ணீரை உபயோகிக்கும் 38 நுகர்வோர்களுக்கு அவர்கள் செலவு செய்துவந்த நீரின் அளவில் 10 சதவிகிதத்தை நிறுத்திவைக்கவுள்ளது. இவர்கள் அதிக அளவாக ஒரு நாளுக்கு 2 கோடி லிட்டர் நீரைப் பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில் 20 சதவிகித நீர் விநியோகத்தை பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் நிறுத்தியது. இதன்மூலம் ஒரு நாளுக்கு 10 மில்லியன் லிட்டர் நீரை பெங்களூரு நீர் வழங்கல் வாரியத்தால் சேமிக்க முடிகிறது.
மேலும், கட்டடப் பணிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் இந்த முடிவால் அடுக்குமாடி குடியிருப்புகள், பலதரப்பட்ட வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்பாக பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர், அதிக நீரை பயன்படுத்தும் நுகர்வோர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் குடிநீர் பற்றாக்குறையை திறம்படக் கையாளும் 5 விதிமுறைகள் குறித்து விளக்கி அவற்றை பின்பற்ற அறிவுறுத்தினார். நீரை சேமிக்கும் தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தும் விதங்கள், ஆழ்துளை கிணறுகளை கண்காணித்தல், மழைநீர சேகரிப்பை எளிமைப்படுத்துவது மற்றும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை அறிந்திருத்தல் உள்ளிட்ட 5 விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.