இலங்கை வரும் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார்! கடவுச்சீட்டில் காத்திருந்த ஏமாற்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை(Sri Lanka)நோக்கி பயணிக்கவுள்ளதாக, அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒருவழி கடவுச்சீட்டு
இந்நிலையில் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள(India) இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு கடவுசீட்டு வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்ட இந்த மூவருக்கும் ஒருவழி கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள்
மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை வந்தவுடன் அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்திருந்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இலங்கையின் பயங்கரவாத தகவல் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகளவில் சர்ச்சை
உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், இவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்கும் வகையில் இந்தியா அரசினால் மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் அவர்கள் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.