மகாராஷ்டிரத்தில் தையல் கடையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் மூச்சுத் திணறி பலி
மகாராஷ்டிரம் மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் உள்ள தையல் கடையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி பலியாகினர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டானா பஜாரில் அமைந்துள்ள கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட பங்கர தீ விபத்தில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் மனோஜ் லோஹியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சத்ரபதி சம்பாஜிநகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் கீழ் தளத்தில் தையல் கடை மற்றும் பிற வணிக நிறுவனங்களும், மேல் தளத்தில் ஒரு குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை “அதிகாலை 4 மணியளவில் கடையின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து 4.15 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கட்டடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்தவர்களில் 7 பேர் மூச்சுத்திணறல் காரணமாக பலியாகியுள்ளனர்.” பலியானவர்களில் மூன்று பேர் பெண்கள், இரண்டு பேர் ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள்.
தீ விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று காவல் ஆணையர் மனோஜ் லோஹியா தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.