ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி விட்டு கொன்ற வட மாநில பயணி.., கேரளாவில் பயங்கரம்
டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் பரிசோதகர் மரணம்
இந்திய மாநிலமான கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்ற விரைவு ரயிலில் வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தார்.
அப்போது S11 என்ற பெட்டியில் ரஜினிகாந்த் என்ற பயணி மதுபோதையில் இருந்துள்ளார். அவர், உரிய முன்பதிவு இல்லாமல் ரயில் பயணம் செய்திருப்பது தெரியவந்தது.அவருடன் இன்னும் சிலரும் முன்பதிவு இல்லாமல் வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, திருச்சூர் அருகே உள்ள வேலப்பையா என்ற இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை ரஜினிகாந்த் தள்ளிவிட்டார்.
அந்த நேரத்தில், எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில் டிக்கெட் பரிசோதகர் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்தை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.