இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை… கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர் சுனக்
பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெருக்கடியை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளார்.
ஆயுதம் விற்பதை நிறுத்த நடவடிக்கை
மூன்று முக்கிய பிரித்தானிய எதிர்க்கட்சிகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அந்த எதிர்க்கட்சிகள், இந்த நெருக்கடி பற்றி விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதாக சட்டத்தரணிகள் கண்டறிந்தால் அரசாங்கம் ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று முதன்மை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
சுயாதீன விசாரணை
இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, போலந்து குடிமக்கள், பாலஸ்தீனியர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் துயரமானது மற்றும் திட்டமிடப்படாதது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு சுயாதீன விசாரணைக்கு இஸ்ரேலிய இராணுவமும் உறுதியளித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்துவதற்கான சாத்தியத்தை மறுத்துள்ள பிரதமர் ரிஷி, அந்த நாட்டிற்கான ஆயுத ஏற்றுமதி மீளாய்வுக்கு உட்பட்டது என்றார்.
இந்த நிலையில் கடந்த 2008 முதல் இஸ்ரேலுக்கு 570 மில்லியன் பவுண்டுகளுக்கான ஆயுத ஏற்றுமதியை பிரித்தானியா முன்னெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.