வினைத்திறனற்ற செயற்பாடு – சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்துவருகின்றமையால் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்க நோக்கி கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சமுர்த்தி வேலைத் திட்டங்களை சமூக வலுவூட்டலை நோக்கி முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இன்று (04.04.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களால் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அமைச்சரால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக சமுர்த்தி அதிகளவான உத்தியோகத்தர்கள் தற்போதுள்ள அபிவிருத்திச் சங்கத்தினால் எவ்வித நன்மைகளொ அன்றி செயற்பாடகளோ நடைபெறுவதில்லை என்றும் வெறுமனே பழிவாங்கல்களும் இடமாற்றங்களுமே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகத்தை மீள தெரிவுசெய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந் நிலையிலேயே தற்காலிக விசேட குழு ஒன்றை அமைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்..
இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர் –
எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டங்கள எமது மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாசைகளையும் நிறைவேற்றும் வகையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். இதை வேறொரு இடத்திலிருந்து நிர்வகிக்கவோ நிர்ணயிக்கவோ முடியாது. அவ்வாறான நிலைக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்..
அதனடிப்படையில் பிரதேச ரீதியான நிர்வாகங்களை கட்டமைப்பிலுள்ள இடர்பாடுகளை கருத்திற்கொண்டு தான் மாவட்ட ரீதியில் ஒரு விசேட குழுவை நியமிமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அத்துடன் குறித்த குழு துரிதமாக பிரதேச ரீதியான கட்டமைப்பை உருவாக்கி சமுர்த்தி திணைக்களத்தினை வினைத்திறனாக கொண்டு நடத்துவதற்கும் மக்களுக்கு தேவையான சேவைகளை தடையின்றி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-