ஊர்காவற்துறையில் தாக்குதலுக்கு சென்ற வன்முறை கும்பல் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு சென்ற வன்முறை கும்பலை, நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஊரவர்களால் ஒப்படைக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த 10 இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் வட்ஸ் அப் செயலியில் குழுமமாக செயற்பட்டு வந்துள்ளனர். அதன் போது இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முரண்பாடு தோன்றியுள்ளது.
அதனை அடுத்து ஒருவர் மற்றையவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளை சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்றினை ஊருக்கு வரவழைத்துள்ளார்.
அதனை அடுத்து ஊருக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பலை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.