இந்த இரு ஆவணங்கள் கட்டாயம்… பிரித்தானியர்களுக்கு ஐரோப்பிய நாடொன்று புதிய கட்டுப்பாடு
இந்த கோடையில் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டுடன் இந்த இரு ஆவணங்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் ஆவணங்கள்
ஸ்பெயினுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் ஆவணங்களை எடுத்துச் செல்ல நேரிடும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Brexit நிறைவேறிய பின்னர் ஷெங்கன் பகுதியில் உள்ள நாடுகளுக்கு பயணப்படும் பிரித்தானியர்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. பிரித்தானியர்கள் உட்பட, வெளிநாட்டவர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடவுச்சீட்டுடன் மேலதிகமாக இரு முக்கிய ஆவணங்களை பிரித்தானியர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அதில், பயணம் முடித்து திரும்புவதற்கான செல்லுபடியாகும் விமான டிக்கெட்டும் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளனர்.
தொகை கையிருப்பு
அத்துடன், பயணிகள் தங்கள் வருகையின் போது எங்கே தங்க உள்ளனர் என்பதற்கான ஆவணமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதாவது ஹொட்டல் முன்பதிவு செய்ததற்கான ஆவணம், அல்லது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் தங்குவதாக இருந்தால், அவர்களின் முகவரியுடனான ஆவணம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த இரு ஆவணங்களுடன், செலவிடத் தேவையான தொகை கையிருப்பு குறித்தும் நிரூபிக்க வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு நாளுக்கு 97 பவுண்டுகள் வரையில் செலவிட நேரிடும் என்பதால், அதற்கான ஆதாரங்கள் கோரப்படும் என்றும் ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் செலவிட போதுமான பண வசதி குறித்து ஆவணங்கள் சமர்ப்பிக்க நேரிடும் என்றே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.