தைவான், ஜப்பானை அடுத்து பிரபல நகரத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்
தீவு நாடான தைவானை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தை அடுத்து நியூயார்க் நகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லெபனான், நியூ ஜெர்சி அருகே
மக்கள் தொகை அதிகம் உள்ள நியூயார்க் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் குறியீட்டில் 4.8 என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லெபனான், நியூ ஜெர்சி அருகே மையம் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கனெக்டிகட் மற்றும் மசாசூசெட்ஸ் மாநிலங்களிலும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, பாஸ்டன் மற்றும் பிலடெல்பியாவில் வசிப்பவர்களும் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.
மேலும், நியூ ஹாம்ப்ஷயர் எல்லைக்கு அருகே 200 மைல்களுக்கு அப்பால் பல வினாடிகள் நீடித்த நடுக்கம் உணரப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுவரை சேதங்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
ஜார்ஜியாவிலிருந்து கனடா வரை
மேலும், கடந்த நூற்றாண்டில் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 23ம் திகதி பதிவான 5.8 அளவிலான நிலநடுக்கம் ஜார்ஜியாவிலிருந்து கனடா வரை மில்லியன் கணக்கான மக்களை உலுக்கியது.
மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.