திடீரென உயிரிழந்த களனி பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன்: நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவன் சுகவீனமடைந்து உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவனின் மரணம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குவதற்காக களனி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
8 பேரிடம் வாக்குமூலம்
இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய நான்கு மாணவர்களிடமும், மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற விடுதி கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சாரதி உள்ளிட்ட 08 பேரிடமும் இந்த குழு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நோய்வாய்ப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் குழுவினால் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவசரகால சுகாதார நிலைமைகளுக்கு பல்கலைக்கழக நடவடிக்கைளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதி ஊழியர்களுக்கும், விரும்பும் மாணவர்களுக்கும் முதலுதவி மற்றும் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.