முன்னாள் பெண் சிறைக்கைதி ஒருவரிடமிருந்து இளவரசி கேட்டுக்கு ஒரு செய்தி
பிரித்தானிய இளவரசி கேட் சந்திப்பைத் தொடர்ந்து, தனது கிரிமினல் வாழ்க்கையை கைவிட்டார் ஒரு பெண்.
தற்போது, தன் வாழ்வை மாற்றிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்துள்ள நிலையில், அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அந்தப் பெண்.
வாழ்வை மாற்றிய இளவரசி
இங்கிலாந்திலுள்ள Reading என்னுமிடத்தைச் சேர்ந்த ஃப்ரான்செஸ்கா (Francesca Fattore, 44) என்னும் பெண், போதைக்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, 2020ஆம் ஆண்டு, அவரை சந்தித்துள்ளார் இளவரசி கேட்.
அந்த சந்திப்பு ஃப்ரான்செஸ்காவின் வாழ்வையே தலைகீழாக மாற்றிவிட்டது. இளவரசி கேட் கூறிய ஆலோசனைகளால் தன் குற்றச்செயல்களிலிருந்து விடுபட்ட ஃப்ரான்செஸ்கா, இப்போது, தன்னைப்போல் சிறை சென்று திரும்பியவர்களின் மறுவாழ்வுக்காக பல்வேறு உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிக்கொண்டே, சிறை சென்று திரும்பிய பெண்களுக்கான மன நல ஆலோசனைகள் முதல் பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறார் ஃப்ரான்செஸ்கா.
இளவரசி கேட்டுக்கு ஒரு செய்தி
தன் வாழ்வையே மாற்றிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்ததையடுத்து, அவருக்கு ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஃப்ரான்செஸ்கா.
ஃப்ரான்செஸ்காவின் தாயாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வேதனை தனக்கும் புரியும் என்று கூறியுள்ள ஃப்ரான்செஸ்கா, இளவரசி கேட்டுக்கு தன் அன்பைத் தெரியப்படுத்துவதாகவும்,
நீங்கள் புற்றுநோயுடன் வாழவேண்டியதில்லை, புற்றுநோய்தான் உங்களுடன் வாழவேண்டியுள்ளது என்றும், அது உங்களை மேற்கொள்ள நீங்கள் விடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்றும், தொடர்ந்து போராடுமாறும் இளவரசி கேட்டுக்கு உற்சாகமூட்டியுள்ளார்.