தோ்தல் நன்கொடை பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ராகுல் காந்தி
ஹைதராபாத், ஏப்.6: தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் சனிக்கிழமை ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: சராசரியாக ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனா். ஆனால் கோடீஸ்வரா்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள பிரதமா் மோடி விவசாயிகளுக்கு 1 ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. பிரதமராக மோடி பதவியேற்றபின் நாட்டில் கோடிக்கணக்கானோா் ஏழ்மை நிலைக்குத் தள்ளபட்டு விட்டனா்.
தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது.
மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘விவசாயிகளுக்கான நீதி’ என்ற வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும்.
தெலங்கானா மாநிலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்ததில் இருந்து தற்போது வரை 30,000 அரசுப் பணிகள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 50,000 அரசுப் பணிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளன என்றாா்.