அதிபர் தேர்தல்! வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இரட்டை நிலைப்பாடு
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதில் அரசியல்வாதிகள் பல குழப்பங்களை எதிர்நோக்குவதாக தெரிய வந்துள்ளது.
தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான தரப்பினரும் இந்த அரசியல் தரப்பினருக்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களும் இரட்டை நிலைப்பாடுடன் இருப்பதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் தேர்தல்
இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் திகதி மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு தனி நபரை வெற்றியடைய செய்வதற்கு பதிலாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய சிறந்த வேலைத்திட்டத்தை தேர்தலின் மூலம் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.
இவ்வாறன வேலைத்திட்டத்தை முன்வைக்கும் தரப்பினருடன் இணைந்து பணியாற்ற தான் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடன்களை மீள செலுத்துவதை மாத்திரம் இலக்காக கொண்டு செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எந்தவொரு திட்டமும் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என சரித்த ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், வரவு செலவு திட்டத்தில் உள்ள இடைவெளியை குறைக்கவும் தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த கவனயீனமான நடவடிக்கையை தான் உள்ளிட்ட சுதந்திர மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.