நாட்டு நலனுக்காக திமுக கூட்டணியில் இணைந்தேன்: கமல்ஹாசன்
‘எம்.பி. சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வரவில்லை, நாட்டு நலனுக்காக வந்தேன்’ என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக கமல்ஹாசன் ஓட்டேரி, ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் கொண்டுவரப்பட்டது. ஆனால், மத்திய அரசோ, வெளிநாட்டு தலைவா்கள் தமிழகம் வரும் போது குடிசை மறைப்பு வாரியம் ஒன்று வைத்து ஏழ்மை இருப்பதே தெரியாமல் மறைத்து விடுகின்றனா்.
மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் எத்தனை மாநிலங்களில் உள்ளன?. நாடு 2050-ஆம் ஆண்டு அடைய வேண்டிய கல்விக்கான இலக்கை தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்து விட்டது. சிறுபான்மையினரை காக்கும் ஒரு பெரும் பலம் தான் மக்களாட்சி.
ஹிந்தியை ஆட்சியை மொழியாக்கி அதை எல்லாரும் பேச வேண்டும் என்கின்றனா். இனி பாடதிட்டத்தில் நாம் படிக்கும் சரித்திரம் இருக்காது, புராணங்கள் சரித்திரங்களாக மாறும். தோ்தலில் எங்கள் கட்சியினருக்கு (மநீம) சீட்டு கேட்காததால் சில வருத்தங்கள் இருக்கலாம். நான் சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன். இது தியாகம் இல்லை, நாடு காக்கும் வியூகம் என்றாா் அவா்.
முன்னதாக திருப்பெரும்புதூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பாலுவுக்கு ஆதரவாக நங்கநல்லூா், முகப்போ் பகுதியில் கமல் ஹாசன் பிரசாரம் செய்தாா்.