சஜித் பிரேமதாசவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை
தமது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வர்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்
கட்சியுடன் இணைந்து கொள்பவர்கள், ஊழல் செய்பவர்களாக இல்லாமல் இருந்தால் மாத்திரமே மக்கள் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்வார்கள் என்று அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்திக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் (G. L. Peiris) அணிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பின்னரே இந்த கருத்தை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார்.
உடன்படிக்கை
ஏற்கனவே கட்சியுடன் கூட்டணிகளை இணைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சித் தலைவருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
எனவே, எந்த கூட்டணிக்கும் தாம் எதிரானவன் அல்ல எனினும் தவறானவர்களுடன் இணைந்தால், எந்தவொரு கூட்டணியையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஜி.எல் பீரிஸ் அணிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை அவசரமாக செய்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னணி உறுப்பினர்களும், மறுபுறத்தில் ஜி.எல்.பீரிஸின் அணியின் முக்கிய உறுப்பினர்களும் அறிந்திருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன