பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது ; நளின் பெர்னாண்டோ
பண்டிகை காலங்களில் பெரிய வெங்காயம் தவிர மற்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சித்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கை
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்து நுகர்வோருக்கு தரமற்ற பொருட்களை வழங்கும் வர்த்தகர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இனிப்பு வகைகளின் விலை அதிகரிப்பு
இதேவேளை, சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, புத்தாண்டு காலத்தில் இனிப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடங்களை விட இந்த வருடம் இனிப்புகள் கொள்வனவு குறைந்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.