இரட்டைக் கொலை சம்பவம் ; விமானப்படை வீரர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லை
ஹொரணை, மொரகஹஹேன, மாலோசல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (07) பிற்பகல் இரட்டைக் கொலைச் செய்துவிட்டு தப்பியோடிக்கொண்டிருந்த விமானப்படை கோப்ரல் ஒருவர் நேற்று (08) அதிகாலை அங்கமுவ சந்தியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
இரத்மலானை விமானப்படை முகாமில் கடமையாற்றும் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசேட நடவடிக்கை
ஹொரணை மற்றும் மொரகஹஹேன இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க மேல் மாகாண தென் குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, பொலிஸார் மீரியகல்லவின் வீட்டை சுற்றிவளைத்து அந்த நபரை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் சந்தேகநபரின் தாய் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் இருந்ததாகவும், சந்தேகநபர் நேற்று முன்தினம் (7) காலை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் வீடு திரும்ப வேண்டும் என்ற இரகசியத் தகவலின் பிரகாரம், அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிசார் வீதித் தடை அமைத்து வரும் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி சுட ஆரம்பித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிசார் பதிலுக்கு சுட்ட போது படுகாயமடைந்த நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் மார்புப் பகுதியில் T56 துப்பாக்கி தோட்டா பாய்ந்தது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹந்தபாங்கொட ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வாடகைக் கொலையாளி எனவும், அவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் சகோதரரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மருதானை முகாமில் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக் கொலைச் சந்தேக நபரைக் கைது செய்ய பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் குற்றச் செயல்களுக்கு முன்னும் பின்னும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொலையாளிகள் வந்த காரில், லாண்ட் மாஸ்ரரின் பதிவு எண் இணைக்கப்பட்டிருந்தது. கொலையின் பின்னர் பாதுக்கவை நோக்கி தப்பிச் சென்ற வாகனம் தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதில் பொருத்தப்பட்டுள்ள பதிவு இலக்கத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே இது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பதிவு இலக்கம் கொண்டலாண்ட் மாஸ்ரரின் உரிமையாளர் கட்டுபொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்ததையடுத்து, இதனை உறுதிப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று கட்டுபொட பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இரட்டைக் கொலைக்காக வந்த கொலையாளிகள் கடந்த 4ம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் காரில், லாண்ட் மாஸ்ரர் இலக்கத்தை பொருத்தியுள்ளனர்.
குறித்த கார் நீர்கொழும்பில் உள்ள வாகன வாடகை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை செய்யப்பட்ட இரட்டைக் கொலையைச் செய்த விமானப் படை வீரரின் பெயரில் வெளிநாட்டில் இருந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹோமாகம ஹந்தயா, உயிரிழந்த விமானப்படை வீரரின் பெயரில் வீடுடன் கூடிய காணி ஒன்றை வாங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி மின்சாரம், குடிநீர் கட்டணங்களும் அவர் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விமானப்படை கோப்ரல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் விமானப்படை தளபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதுக்க பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விமானப்படை கோப்ரல் வார இறுதி விடுமுறையில் முகாமிலிருந்து வெளியேறிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை வீரர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி விமானப்படையில் இணைந்து கொண்டதாகவும், அவரும் இரத்மலானை விமானப்படை ரக்பி அணியில் அங்கம் வகித்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.