பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும்
தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தங்கள் நிலத்தை காக்கவே அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்னொமொரு அத்திப்பட்டியை உருவாக்க முயல்கின்றாரா என்ற கேள்வியே எம் மத்தியில் உள்ளது.
பொன்னாவெளி மக்களின் போராட்டம் கட்சி சார்ந்த போராட்டம் அல்ல. அவர்களின் நிலம் சார்ந்த போராட்டம். போராட்டத்தின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் கூறியது தவறானது. அனைத்து கட்சிகளும் அந்த மக்களின் கோரிக்கை சரியானது என்பதால் அவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள்.
மக்களின் நியாமான கோரிக்கைக்கு தீர்வு காண முனையாமல் , தமிழ் திரைப்படம் ஒன்றில் அத்திப்பட்டி என்ற கிராமம் அழிக்கப்பட்டது போன்று இந்த கிராமத்தையும் அழிக்க முயல்கின்றார்களா என நியாமான சந்தேகம் எமக்கு உண்டு.
அன்று களப்பணிக்கு போனதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவிக்கின்றார். அதற்கு எதற்காக பேருந்துக்களில் 500 பேருக்கும் மேற்பட்டவர்களை அழைத்து செல்ல வேண்டும் ? அதனால் அவர் களப்பணிக்கு சென்றாரா ? கள்ள பணிக்கு சென்றாரா ? என்ற சந்தேகம் எமக்கு உண்டு.
பொன்னாவெளி மக்களின் கோரிக்கை நியாயமானது. அதனால் அவர்களுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி என்றுமே ஆதரவாக நிற்கும் என தெரிவித்தார்.