நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில்(Vavuniya) உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிஸார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களையும் விடுவிக்கக் கோரி, ஆலய நிர்வாகத்தினரும், கைது செய்யப்பட்ட எட்டுபேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஏப்ரல் 04ஆம் திகதி, டெய்லருடன் கூடிய டெக்டர், ஒரு தண்ணீர் பௌசர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களை பொலிஸார் விடுவித்தனர்.
3 இலட்சம் ரூபாய் பெறுமதி
50 கிலோ அரிசி, 10 கிலோ உழுந்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்கு, மணி உள்ளிட்ட சில பொருட்கள் என சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்னமும் பொலிஸாரிடமே காணப்படுவதாக, ஆதிலிங்கேஸ்வர ஆலய நிர்வாக சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறினார்.
நீதிமன்ற உத்தரவை மீறி இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு சைவர்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மார்ச் 8 ஆம் திகதி இரவு பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிஸாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதி, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 8 பேர் முறைப்பாடு செய்தனர்.
தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.