அரவிந்த் கேஜரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
தன்னை தொடர்ந்து அமலாக்கத் துறை காவலில் வைக்க கேஜரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உரிய காரணங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.