என் பொணத்தை தாண்டி போ; திமுக பிரச்சார வாகனம் முன் படுத்து தர்ணா- மூதாட்டி ஆவேசம்!
திமுக பிரச்சார வாகனத்தின் ஊருக்குள் நுழையவிடாமல் மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
திமுக பிரச்சார வாகனம்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் தமிழக அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏற்காடு தொகுதியில் மலை கிராமங்கள் அதிகம் இருக்கும் இடமாகும்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக வேட்பாளர் குமரகுரு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீச பாண்டியன், பாமக சார்பில் தேவதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ற்காட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொனப்பாடி என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
மூதாட்டி தர்ணா
இவர்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால், இந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரவில் திமுகவினர் சொனப்பாடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றனர். பிரச்சார வாகனம் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று கூறி ஊர் எல்லையிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது திடீரென மூதாட்டி ஒருவர் பிரச்சார வாகனத்தின் முன்பு படுத்துக்கொண்டு, “போறதா இருந்தா என் பொணத்தை தாண்டி போ” என தர்ணாவில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கும் திமுகவினருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஏற்பட்டது.
இதன் காரணமாக பிரச்சாரம் செய்யாமல் திமுகவினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். திமுக மட்டுமின்றி எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் எங்கள் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.