;
Athirady Tamil News

அரியாலையில் தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பு

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண் சிகிச்சை நிலையத்திற்காக கொடுக்கப்பட்ட காணி

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினை குறித்த தனியார் வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையம் ஒன்றினை அமைப்பதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கியுள்ளார்.

குறித்த காணி சுமார் 25 பரப்பு விஸ்தீரணம் கொண்டது என ஊரவர்கள் தெரிவித்தனர். குறித்த காணியினை சுற்றி மிக உயரமான மதில்கள் காணப்படுகின்றனர். காணியின் முகப்பு பகுதியில் வாகனங்கள் உட்செல்ல கூடியவாறான பெரிய நுழைவாயிலும் அதனை ஒட்டி சிறிய நுழைவாயிலும் காணப்படுகின்றன.

காணிக்கு பாதுகாப்பாக தினமும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில் இருப்பார்கள்.

அந்த காணிக்குள் என்ன நடக்கிறது என்பது அயலவர்கள் எவருக்கும் எதுவும் தெரியாது.

இதனை சாதகமாக பயன்படுத்தி போதனா வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத பொருட்கள் , நோயாளர்களின் பம்பஸ் , ஊசி மருந்து போத்தல்கள் , ஊசிகள் (சிறிஞ்) , வெற்று செலைன் போத்தல்கள் , அதற்குரிய வயர்கள், பஞ்சுகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டி தீ மூட்டி வந்துள்ளனர்.

அயலவருக்கு ஏற்பட்ட சந்தேகம் – வெளிவந்த உண்மைகள்

இந்நிலையில் இன்றைய தினம் மாலை அயலவர் ஒருவருக்கு புகை மூட்டம் காரணமாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் , மூச்செடுக்க முடியாத அளவுக்கு மனமும் அந்த காணிக்குள் வந்தை உணர்ந்து . அயலவர்களுக்கு தகவல் தெரிவித்து, அயலவர்களுடன் குறித்த காணிக்குள் சென்ற பார்வையிட முயன்றுள்ளனர்.

அதற்கு அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களின் தடையை மீறி உள்ளே சென்று பார்த்த போது , காணிக்குள் மருத்துவ கழிவுகளுக்கு தீ மூட்டப்பட்டு உள்ளமையை கண்டறிந்துள்ளனர். அத்துடன் ஏற்கனவே மூடை , மூடையாக மருத்துவ கழிவுகளை அக்காணிக்குள் கொட்டி பாதி எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து , வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொறுப்பு கூறி , அவற்றை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஊடாக அறிவித்தனர்.

அதேவேளை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

மூன்று மணி நேரமாக சம்பவ இடத்திற்கு வருகை தராத பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகமும்.

பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மூன்று மணி நேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு வருகை தராதலால் இரவு 06. 30 மணியளவில் மக்கள் யாழ். – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தால் போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து 07மணியளவில் முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து களைந்து போகுமாறு பணித்தனர்.

பொலிசாரிடம் பொலிஸ் அதிகாரி மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தரும் வரையில் இங்கிருந்து செல்ல மாட்டோம் என உறுதியாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பின்னர் இரவு 07.15 மணியளவில் சம்பவ இடத்திற்கு சீருடையில் வந்த இரு பொலிஸார் வீதிகளில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய முனைந்தார். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தமக்கு 10 நிமிடங்கள் அவகாசம் தரும் படியும் தமது உயர் அதிகாரி வருகை தந்து கொண்டு இருப்பதாக கூறியதை அடுத்து மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரி

இரவு 07.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உதவி அத்தியட்சகர் மக்களுடன் பேச்சுக்களை நடாத்தி போராட்டத்தை முடித்து வைத்ததுடன் , வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து கொண்டு இருக்கிறார். அவரிடம் உங்கள் கோரிக்கைகளை முன் வையுங்கள் என கூறி மக்களுடன் இணைந்து வைத்தியசாலை பணிப்பாளருக்காக உதவி அத்தியட்சகரும் காத்திருந்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் வருகை

அந்நிலையில் இரவு 08.20 மணியளவில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

தாம் இவ்விடத்தில் மிக விரைவில் கண் சிகிச்சை நிலையத்தை அமைக்க உள்ளோம். அதற்கான வேலை திட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த காணி சுற்று மதில்களுடன் பாதுகாப்பாக இருப்பதானால் , வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத பொருட்களான ஓடுகள் , மரங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவதற்காக கொண்டு வந்து வைத்துள்ளதாகவும் , வைத்தியசாலையில் சேகரிக்கப்படும் உக்க கூடிய கழிவுகளாக இலைகள் போன்றவற்றை இங்கே சேகரித்து அதனை பசளையாக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளோம், அதேபோன்று , காணியை சுற்றி சுற்று மதில்கள் காணப்படுவதால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் காணிக்குள் உட்புக முடியாது என்பதால் பம்பஸ இங்கே கொட்டி உலர விட்டு , பின்னர் அவற்றை மீள எடுத்து சென்று எரியூட்டி ஊடாக எரிப்போம். இதுவே நடைமுறை என கூறினார்.

அதற்கு மக்கள். காணிக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டது என்பதனை கூறியதும். தனக்கு அதுபற்றி தெரியாது எனவும். அவ்வாறு நடந்து இருந்தால் , அது தவறு என்றும் , அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.

அதேவேளை மருத்துவ கழிவுகளை எரியூட்டியமையால் , நிலத்தில் உள்ள மண் மாத்திரமன்றி நிலத்தடி நீரும் மாசு பட்டு இருக்கும். எனவே அது தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என பணிப்பாளரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அக் கோரிக்கையை பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்.

அதனை தொடர்ந்து காணிக்குள் எங்கெல்லாம் மருத்துவ கழிவுகளை கொட்டி , தீ மூட்டியுள்ளார்கள் என்பதனை நாம் உங்களுக்கு காண்பிக்கிறோம் என மக்கள் பணிப்பாளரை காணிக்குள் அழைத்து சென்ற போது , பொலிஸார் ஊடகவியலாளர்களை காணிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

காணிக்குள் பெருந்தொகையான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு , தீ வைக்கபப்ட்டுள்ள இடங்களை மக்கள் பணிப்பாளரை நேரில் அழைத்து சென்ற வேளை மக்களின் அலைபேசிகளையும் வாங்கி வந்து விட்டே காணிக்குள் செல்ல பொலிஸார் அனுமதித்தனர்.

காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டிய விடயம் வெளியில் தெரிய வராது இருக்கும் முகமாகவே பொலிஸார் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பொலிஸார் வருகை தர முதலே காணிக்குள் அனைத்து தரப்பினரையும் மக்கள் அழைத்து சென்று கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை காண்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் காணிக்கு அருகில் உள்ள மயானத்தில் கொட்டி எரித்துள்ளார்கள்.

அதேவேளை கடந்த 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குறித்த காணியில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் உள்ள
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தின் பின்புறத்தில் சட்டவிரோதமான முறையில் இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் , பாரியளவிலான கிடங்குகள் வெட்டப்பட்டு அவற்றுக்குள் புதைக்கப்பட்டன.

அத்தனையும் அரியாலை மக்கள் கண்டறிந்து அதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து , அங்கிருந்து அந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அந்நிலையில் இந்த காணிக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதனை பார்க்கையில் , மயானத்திற்குள் கழிவுகளை கொட்டியமைக்கு எதிர்ப்பு கிளம்பிய நாள் முதல் இந்த காணிக்குள் கொட்ட தொடங்கியுள்ளனர் என அப்பகுதி மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.