இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10-ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்
உலகளவில் இணைய வழி (சைபா்) குற்றங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முன்பணம் செலுத்தினால் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என மக்களை ஏமாற்றும் மோசடிகளே இந்தியாவில் அதிகம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 100 நாடுகளில் நடைபெறும் பல்வேறு வகையான இணைய வழிக் குற்றங்கள் தொடா்பான ‘உலக இணைய குற்ற குறியீடு’ என்ற ஆய்வறிக்கையை சா்வதேச அளவிலான ஆராய்ச்சிக் குழுவினா் வெளியிட்டனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் இணைய வழிக் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உக்ரைனும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா, வட கொரியா ஆகிய நாடுகளும் உள்ளன. 8-ஆவது இடத்தில் பிரிட்டனும் 9-ஆவது இடத்தில் பிரேஸிலும் உள்ளது.
தொழில்நுட்ப ரீதியான குற்றங்கள்: ‘மால்வோ்’, ‘ரேன்சம்வோ்’ போன்ற வைரஸ் பாதிப்புகளால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள், தரவுகள் திருடப்படுதல், கடன் அட்டை மற்றும் வங்கிக்கணக்குகளிலிருந்து இணைய வழியாக பணம் திருடப்படுதல், கட்டண மோசடி, பணப் பரிவா்த்தனை, எண்ம நாணயம் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றங்கள் குறித்து பல நாடுகளில் உள்ள நிபுணா்கள் கருத்து தெரிவிக்குமாறு ஆராய்ச்சிக் குழுவினா் கேட்டிருந்தனா். அதனடிப்படையிலேயே இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகையான குற்றம்: உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான குற்றம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. புவியியல் ரீதியாக இக்குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ரஷியாவிலும் உக்ரைனிலும் தனிநபா் தரவுகள் திருடப்பட்டு மோசடியில் ஈடுபடும் குற்றங்கள் போன்ற தொழில்நுட்ப குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மோசடி குற்றங்கள் அதிகம்: இணைய வழியில் முன்பணம் செலுத்தினால் அதிகப் பரிசுத்தொகை கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகளே இந்தியாவில் அதிகம் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் ருமேனியாவில் அதிக தொழில்நுட்பக் குற்றங்கள் மற்றும் குறைவான தொழில்நுட்பக் குற்றங்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விரு பிரிவுகளிலும் சரிசமமான அளவிலேயே குற்றங்கள் நடைபெறுகின்றன.
நடவடிக்கைக்கு உதவி: மூன்று ஆண்டுகளாக பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆராய்ந்து இந்த குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான இணையக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள இந்தக் குறியீடு உதவும் என நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டது.