;
Athirady Tamil News

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

0

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர்.

அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற உங்களுக்கு 10 நிமிடம் அவகாசம் தாறோம் என சிவசேனை அமைப்புக்கு மக்கள் கால அவகாசம் கொடுத்தார்கள்.

அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.