;
Athirady Tamil News

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்த காங்கிரஸ்!! சந்தேகத்தைக் கிளப்பும் பின்னணி!!

0

மட்டக்களப்பை மையப்படுத்தி ‘அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்’ என்ற தலைப்புடன் ஒரு கடிதம் சமூக ஊடங்களில் வலம் வந்ததைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் பின்னணி என்ன என்ற தேடலை ஆரம்பித்தோம்.

மட்டக்களப்பு பட்டிருப்பு பெரிய போரதீவில் இந்த அமைப்பின் தலைமைக் காரியாலயம் இருப்பதாக அறிந்து அந்தப் பிரதேசத்தில் பணியாற்றுகின்ற சில கிறிஸ்தவ பாரிமார், உழியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் வினவியபோது, வெறும் அரசியலுக்காக தென்னிலங்கை தரப்பொன்று இவர்களைக் களம் இறக்கியுள்ளதாக் தெரிவித்தார்கள்.

மட்டக்களப்பில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை இவர்கள் பற்றித் தெரிவிக்கும் போது, இந்த அமைப்புக்கும் தமது திருச்சபைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதுடன், இப்படி ஒரு அமைப்பு செயற்படுவது பற்றி தாம் கேள்வியே படவில்லை என்று தெரிவித்தார்கள்.

மெதடிஸ்த திருச்சபையும் இந்த அமைப்பு பற்றி தமக்குத் தெரியவே தெரியாது என்று சிரித்தபடி கடந்து சென்றுவிட்டார்கள்.

மட்டக்களப்பில் செயற்பட்டுவருகின்ற சில சில ‘பாஸ்டர்’களிடம் இந்த அமைப்புப் பற்றிக் கேள்வியெழுப்பியபோது, ‘இது கிறிஸ்தவப் பின்னணியையோ அல்லது எந்த ஒரு கிறிஸ்தவ விழுமியங்களையோ கொண்ட ஒரு அமைப்பு அல்லவென்றும், மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவர்களின் நலன்களை பேணும்படியான எந்த ஒரு காரியத்தையும் இந்த அமைப்புச் செய்ததாக தமக்குத் தெரியாது’ என்றும் கூறினார்கள்.

மட்டக்களப்பில் பணியாற்றுகின்ற ஒரு மூத்த கிறிஸ்தவத் தலைவர் கூறுகின்றபோது, ‘இந்த அமைப்பு கிறிஸ்தவர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் இடையில் நிலவிவருகின்ற உறவைச் சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்டு தமிழின விரோதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கலாம் என்று தாம் உறுதியாகச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தோடு சேரந்தியங்கிய ஈரோஸ்( பிரபா) அணியில் செயற்பட்டு, அந்தத் தரப்பால் வெளியேற்றப்பட்ட சிலர் இந்த ‘அகில இலங்கை கிறிஸ்த காங்கிரஸ்’ அமைப்பில் செயற்பட்டுவருவது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பொதுவாகவே வடக்கு கிழக்கில் ஒரு அமைப்பு செயற்பட்டால், அல்லது வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அமைப்பு செயற்பட்டால், அந்த அமைப்பின் பெயர்ப் பலகையிலோ அல்லது கடிதத் தலைப்பிலோ முதலாவதாக தமிழ் மொழி அறிவிப்புத்தான் இருப்பது வளக்கம்.

ஆனால் ‘அகில இலங்கை கிறிஸ்த காங்கிரஸ்’ என்ற இந்த அமைப்பின் கடிதத் தலைப்பில் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ ஆர்வலர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் இந்த அமைப்பு பற்றிய சந்தேகம் எழுவதற்கு இதுதான் காரணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.