சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இன்று (13) முன்னெடுக்கப்படவுள்ளது.
வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், “சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறிலங்கா அதிபர் அலுவலகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கவுள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இந்த நிகழ்விற்கு “சிலோன் பிஸ்கட் கம்பனி” மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் 10,000 க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு சிறிலங்கா அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்பு பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நாடளாவிய ரீதியில்
இதுவரை காலமும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நுவரெலியாவிலிருக்கும் சிறுவர் இல்லங்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால் இம்முறை அங்குமாத்திரமல்லாமல், நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசுகளையும் இனிப்புப் பண்டங்களையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.