அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
புத்தாண்டு பண்டிகை காலத்துக்காக இவ்வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 530.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) முதல் இரண்டு மாதங்களில், நுகர்வு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 420.7 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
நுகர்வுப்பொருட்கள் இறக்குமதி
இதன்படி, கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் (2024) முதல் இரண்டு மாதங்களில் நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகை 26.2 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் ஏனைய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு 62.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மசாலா பொருட்கள் இறக்குமதி
பால் தொடர்பான பொருட்களுக்கு செலவிடப்பட்ட தொகை 30.5 மில்லியன் டொலர்கள் ஆகும். சர்க்கரை மற்றும் இனிப்புகளை இறக்குமதி செய்வதற்கு 61.6 மில்லியன் டொலர்களும், கடல் உணவுக்காக 19.6 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளன.
மேலும், மசாலாப் பொருட்களுக்கு 19.9 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில் தானியங்கள் மற்றும் துருவல் தொடர்பான பொருட்களுக்காக $30.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.