தமிழகத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்! தீவிரமடையும் தேர்தல் களம்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், தற்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ள 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்தில் களமிறங்கவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
கண்காணிப்பு நடவடிக்கை
இதற்கு இணையாக அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அரசியல் தரப்பினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகளை கவர்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநில பாதுகாப்பு படையினர்
அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் 190 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு ஏற்கெனவே வரவழைக்கப்பட்டு மாவட்ட வாரியாக கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் காவல்துறையினர் எதிர்வரும் 16 ஆம் திகதி களமிறங்கவுள்ளனர்.
பாதுகாப்பு பணிகள்
மேலும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உள்பட மேலும் பல பிரிவினரும் வாக்குப்பதிவு தினத்தன்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.