இஸ்ரேலுடனான மோதல் போக்கு… பிரித்தானியாவில் கலவரங்கள் வெடிக்கலாம்: நிபுணரின் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பிரித்தானியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் பிற பகுதிகளுக்கு
இஸ்ரேல் மீதான ஈரானின் பொறுப்பற்ற தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்தால் உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள நிபுணர் ஒருவர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் பிரித்தானியாவும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்றார்.
ஆனால், இந்த மோதல் போக்கு ஒரு போராக வெடிக்கும் என்றால், பிரித்தானியாவில் ஈரானிய தீவிரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாலையே ஈரான் பழி தீர்க்க முயலும் என்றும், பிரித்தானியாவில் இருந்தே ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு போருக்கான வாசல்
தற்போது இஸ்ரேலும் ஈரானும் தங்கள் பக்கத்தில் இருந்து இன்னொரு நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக இல்லை என்பதுடன், இந்த மோதல் போக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கவும் முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஈரானுக்கு பதுலடி தருவதாக இஸ்ரேல் முயன்றால், அது இன்னொரு போருக்கான வாசலை திறப்பதாகவே கருதப்படும். இஸ்ரேலின் முடிவை தற்போது உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.
டமாஸ்கஸ் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அத்துடன், இஸ்ரேல் அல்லது அமெரிக்கா இந்த விவகாரத்தில் மீண்டும் பதிலடி தருவதாக இருந்தால், வலிமையுடன் தாக்குவோம் எனவும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.