தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார்: ஹமாஸ் முன்மொழிவு
இஸ்ரேல் இராணுவம் காசா மீதான ஆறு வார தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் ஆறு மாதங்கள் முடிவடைந்து ஏழாவது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஒரே ஒருமுறை மட்டும் ஏழுநாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதையடுத்தும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையவில்லை.
ஹமாஸ் அமைப்பு
கத்தார் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்காமையினால் தற்போது புதிய திட்டம் ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.
இதனடிப்படையில் ஆறு வாரங்கள் தாக்குதலை நிறுத்தினால் பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என புதிய முன்மொழிவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவை இஸ்ரேல் ஏற்குமா? எனத் தெரியாத நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று(14) ஏவுகணை தாக்குதலை நடத்தியதுடன் இஸ்ரேலானது ஈரானை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.
பிணைக்கைதி
இதனால் தனது பார்வையை ஈரான் மீது பதித்துள்ள இஸ்ரேல் இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற அவர்கள் 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதோடு இஸ்ரேலின் இந்த தாக்குதலில் காசா முனையில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 100 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
ரஃபா மீது தங்கள் தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ்க்கு எதிரான இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரஃபா பகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் வசித்து வருகின்ற நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.