திமுகவுடன் கூட்டணி.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி அடுக்கடுக்கான கேள்வி!
திமுகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் உங்கள் அரசியல் முழுமை அடையாதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் நாட்டின் பொருளாதாரம், முதலீடு, தேர்தல், எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
அவரிடம் சனாதன தர்மத்திற்கு எதிராக இருக்கும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பதில் கூறியிருப்பதாவது-
இந்த கேள்வியை நான் வித்தியாசமாக பார்க்கிறேன். இந்த கேள்வியை என்னிடம் கேட்பதைவிட காங்கிரஸ் கட்சியிடம் கேட்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். மகாத்மா காந்தியுடன் காங்கிரஸ் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அக்கட்சியின் தலைவராக, நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்திருந்தார்.
எனவே திமுகவுடன் கூட்டணி வைக்க என்ன அவசியம் ஏற்பட்டது என்று காங்கிரஸிடம் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். சனாதான தர்மத்திற்கு எதிரான திமுகவுடன் காங்கிரஸ் ஏன் கூட்டணி வைத்துள்ளது? திமுகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரசுடைய அரசியல் முழுமை அடையாதா? இந்த காங்கிரஸ் கட்சி என்னதான் நினைக்கிறது. திமுக வெறுப்பில் பிறந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தன்னுடைய அசல் தன்மையை இழந்து விட்டது. சனாதன தர்மத்திற்கு எதிரான திமுகவுடன் சேர்ந்து தேர்தலுக்காக அரசியல் செய்து, சனாதான எதிர்ப்பு கட்சியை ஆதரித்தால் அது நாட்டுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். என்று பிரதமர் மோடி பதிலளித்தார்.
டெங்கு மலேரியா போன்றவற்றை ஒழித்தது போல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்-
தமிழர்கள் மத்தியில் திமுக மீது கோபம் உள்ளது. தமிழர்கள் பாஜகவை ஒரு மாற்று சக்தியாக பார்க்கின்றனர். காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றமடைந்த மக்கள் மாநில கட்சிகளை ஆதரிக்க தொடங்கினர். தற்போது மாநில கட்சிகள் மக்களை ஏமாற்றுவதால் அவர்கள் பாஜகவை நோக்கி நகர்கின்றனர். நாட்டின் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வரும்போது, தாங்கள் வாழும் பாஜக ஆளும் மாநிலங்களில் இன்னென்ன வசதிகள், வளர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை பாராட்டி பேசுகின்றனர். என பதில் கூறினார்.
இந்த முறை பாஜக 400 இடங்களுக்கு அதிகமாக மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றினால், நாட்டில் ஒரே மொழி, ஒரே மதம் தான் இருக்கும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோடி அளித்த பதில்-
காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஐநா சபையில் முதன் முறையாக, மிக பழமையான தமிழ் மொழியை நான் பாராட்டி புகழ்ந்து பேசினேன். என் மீது எந்த அடிப்படையில் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறது? நான் வெவ்வேறு மாநில பாரம்பரிய உடைகளை அணியும் போது அது காங்கிரசுக்கு பிரச்சனையாக உள்ளது. நான் ஒவ்வொரு தாய்மொழியையும் கொண்டாடுபவன். அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்க செய்வேன் என்று பதில் அளித்தார்.