திக்கம்புரை ரெயிலர்கடை சந்தி – யாழ் நகருக்கான பேருந்து சேவையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்
பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் வகையில் வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றிருந்த சமயம் குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினையின் அசௌகரியங்கள் குறித்து எடுத்துக் கூறி தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பணிப்புக்கமைய வடபிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இன்றையதினம் (16.04.2924) குறித்த சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கமையவே இன்று காலை 07 மணியளவில் குறித்த பேருந்து சேவையை வைபவ ரீதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதேநேரம் குறித்த பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பளை வைத்தியசாலையை அடைந்து கேகேஎஸ் வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வறுத்தலைவிளான் சாந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆரம்ப வைபவமும் இன்றையதினம் காலை 6.30 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.