மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!
அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கைகூப்பி இரண்டாவது முறையாக மன்னிப்பு கோரினார்.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தனர்.
அவர்களின் மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீங்கள் செய்திருப்பது மிகக் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று காட்டத்துடன் தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் இன்று மீண்டும் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிபதிகள் முன்பு கைகூப்பி மன்னிப்பு கோரினர்.
மேலும், ஊடகங்களிலும் பகிரங்க மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடத் தயார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஆனால், மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைக்க மறுத்த நீதிபதி, இருவரையும் மீண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.