தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து
சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.
இதன்மூலம் பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. குறிப்பாக, அறிவியல் நகரை விடுவித்து, பொறியியல் பீடத்தினை அங்கு உருவாக்குவதற்கு தேசிய நல்லிணக்கமே காரணமாக அமைந்திருந்தது.
அதேபோன்று எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும்.
இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு யாழ் பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினராகிய நீங்களும் உங்களுடைய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக குறித்த சங்கத்தின் ஸ்தாபகரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சிறப்பு விருந்தினராக பல்கலையின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா அவர்களும் கௌரவ விருந்தினராக பிரதிப் பதிவாளர் றெயினோல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.