தனியார் மயமாகும் இலவச கல்வி: அநுர தரப்பிலிருந்து ஒலிக்கும் குரல்
இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நிலை
அவர் மேலும் கருத்து வெளியிட்ட போது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் காணப்படும் கல்விக் கடன் முறைமையினால் ஏற்பட்ட பாரிய சிக்கல்களை தொடர்ந்து அவர்கள் இலவசக் கல்வி குறித்து கவனஞ் செலுத்தி வருகின்ற இந்நிலையில் இலங்கை அரசு இலவசக் கல்வியினை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் மட்டும் காணப்பட்ட தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வியானது தற்போது முழுமையான கல்வி முறைமையையும் அதாவது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியினைக் கூட ஆகிரமிக்கப்போகிறது அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களது கல்வி நிலை கேள்விக்குறியாக மாறிவிடும்.
பாடசாலைகளுக்கு பாதிப்பு
இலங்கையில் கல்விக் கொள்கை மடல் எனும் முன்மொழிவு இப்போது இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ளது. அதில் இலவசக் கல்விக்கு மாற்றீடாக கல்விக் கடன் திட்டங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை நீக்கி வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இலவசக் கல்வியினை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் தேசியப் பாடசாலை முறைமை முற்றாக நீக்கி மாகாணப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரத்திற்கு கொண்டுவருவதுடன் கல்விக்காக அரசினால் ஒதுக்கப்படும் நிதியானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படக்கூடும் என்பதால் பின் தங்கிய பாடசாலைகள் இதன் மூலமாக முற்று முழுவதுமாக பாதிப்பிற்கு உள்ளாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.