வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஆளுநரிடம் கையளித்தனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமானது. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகள், வலயக் கல்வி பணிமனைகளூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் ஊடாக பாடசாலைகளில் மாணவர்களின் பார்வைத் திறன் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், உரிய மாணவர்கள் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பாடசாலைகளில் மாணவர்களுக்கான பார்வை தொடர்பில் ஆராய்வதற்கான பார்வை ஆய்வு அட்டைகளே (Vision charts) இன்று கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆளுநரின் செயலகத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.