வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி
வவுனியாவில் (Vavuniya) மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (17.04.2024) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிறு குழந்தை ஒன்றின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இவ்வாறு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தீவிர விசாரணை முன்னெடுப்பு
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பெண்மணி தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்துள்ளார்.
இதன்போது, வீதியினை மறைத்து நின்ற முகமூடியணிந்த மூவர் குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டியுள்ளனர்.
மேலும், அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.