பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக் கொண்ட இளவரசர் ஹரி: வெளியான ஆவணம்
பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரின் கட்டாயத்தின் பேரில்
இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்த ஹரி, தற்போது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அங்கே வசித்து வருகிறார்.
பிரித்தானியாவில் ஹரி – மேகன் தம்பதியின் குடியிருப்பு ஒன்று கடந்த ஆண்டு சார்லஸ் மன்னரின் கட்டாயத்தின் பேரில் அரச குடும்பத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் பிரித்தானியா திரும்பினால் தங்குவதற்கு குடியிருப்பு இல்லை என்ற நிலை உருவானது.
இந்த நிலையில், இளவரசர் ஹரி தாம் குடியிருக்கும் நாடு, பிரித்தானியா என்றிருந்ததை அமெரிக்கா என மாற்றியுள்ளார். உத்தியோகப்பூர்வ ஆவணங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹரி நிறுவிய நிறுவனம் ஒன்றின் ஆவணங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்கு முன்னர், இந்த நிறுவனம் நிறுவிய போது, ஹரி குடியிருக்கும் நாடு பிரித்தானியா என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹொட்டல் ஒன்றில் தங்கினார்
தற்போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பித்த ஹரி, அதில் குடியிருக்கும் நாடு என்பதில் அமெரிக்கா என மாற்றம் செய்துள்ளார். மட்டுமின்றி, பிரித்தானியாவில், அவர்களுக்கான குடியிருப்பை கைவிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்ட அந்த திகதியை தற்போது அமெரிக்காவில், எப்போது முதல் என்ற திகதியாக குறிப்பிட்டுள்ளார் ஹரி.
அதாவது ஜூன் 29ம் திகதி 2023 முதல் அமெரிக்காவில் ஹரி குடியிருந்து வருவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018ல் திருமணம் முடித்த ஹரிக்கு ராணியார் இரண்டாம் எலிசபெத் Frogmore Cottage மாளிகையை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
ஆனால் மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த குடியிருப்பை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து ஜூன் மாதம் அவர்கள் அந்த மாளிகையை ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, மே மாதம் மீண்டும் ஹரி பிரித்தானியா திரும்ப உள்ளார். கடந்த முறை சார்லஸ் மன்னரை சந்திக்கும் பொருட்டு லண்டன் திரும்பிய ஹரி, ஹொட்டல் ஒன்றில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.